Wednesday 18 April 2012

விழிச்சுமை

கனவுகளில்
கவிதை எழுதுங்கள்....
செல்லுமுன் 
எழுதுகோலை 
எடுத்து செல்ல 
தவறாதீர்கள்.......
மை தீர்ந்தால்
கண்ணீரைப் 
பயன்படுத்துங்கள் ....
தேவை ஏற்படின் 
கைக்குட்டையை 
தேடிப்பாருங்கள்.....
அப்போது தான்
தெரியவரும்
தொலைந்த காதலின் 
விழிச்சுமைகளை..........!  

Tuesday 17 April 2012

மாயம்....

 
என்
நினைவுகள்
தூங்கும் நேரம் -நீ
நிழலாக 
நகர்ந்தாய் ......!
நீ-தூங்கும் நேரம்
நான்-கனவாக
வந்தேன்......! 
  

Monday 16 April 2012

கி.பி-3012 .........

 
என் நினைவுகளும் 
உன் நினைவுகளும் 
அடிக்கடி
மோதிக்கொள்ளும் 
பனிப்போர்க்காலம் இது.....!
காதல் 
நம்மிருவருக்கும் 
பொதுவென்றாலும்
 என் காதல் 
எனக்கு பெரிது
என்பது 
இந்த வினாடிவரை 
சத்தியமானதொன்றாகும் ......!
உன்னை 
பொறுத்தவரையில் 
காதல் மரித்ததாகவே 
கருதுகின்றாய்.....!
என்னைப்பொறுத்தவரையில்
கோடி யுகங்களும் 
வாழும் ஒன்றாகும்......!
பலரால் என் காதல் 
சின்னாபின்னமாக 
கிழிக்கப்பட்டப்போதிலும் 
என் இதயத்தில் 
இன்னும் காத்திரமாக 
பாதுகாக்கப்பட்டப்படி .......!
கருவறையில் சிசுவைப்போல.....!
முட்டை ஓட்டினுள் குஞ்சைப்போல....!
                               *
குழந்தை நிலாவிற்கு 
ஆசைப்படுவது போல 
உன் 
நினைவுகளை  அடிக்கடி
அசைப்போட்டு 
மகிழும் என் 
கனவுக் கவிதைகள்......!
                  *
இரவுகளில் 
அழும்போது 
கூட 
நீ 
இல்லாத 
வெறுமை 
நெஞ்சைப்பிழிந்தெடுக்கும் ...!
                    *
என்
வாழ்வின் குறி
நீயாக
இருக்க
அன்றைய சந்தர்ப்பங்கள்
ஏனோ 
சதிக்குள்
கருகிவிட்டன......!
             *
காலத்தராசுகள் அன்று 
உன்னை
முழு நிலவாக்கி 
இருந்தால்
இன்று
உன்னுடன் 
இணைந்து
இக்கவிதை எழுதியிருப்பேன்.......!

                      *
இன்றும்
ஒரு ஏக்கம்.......!!!!
நீ
கனவுகளில் 
வருவது போன்று
என்னைப்புரிந்து
கொள்வாயா என்பது தான்......  !
                  *

  

 
 
 
  

Thursday 5 April 2012

அசோகவன சீதை..



ராதையாய் சீதையாய் எழுதி பார்க்கிறேன்
புதிய சகாப்தங்களை...
சூர்ப்பனகைகளும் மேனகைகளும்
எனக்குள் அடங்கித்தான்
யாதும் ஆகி நிற்கிறேன்;
என் பிரிவினைகளுடன்!
ஆயிரம் கரமும் காலும் நாக்கும் முளைத்து!
கடவுளா காமுகியா தேவதையா பெண்ணா...
நான் யார் இதில் உங்கள் பார்வையில்...

இதிகாசங்களின் பக்கங்கள் தொடங்கி இன்றைகள் வரை
எங்களின் வித்துக்களும் அதன் முடிச்சுகளும்...
நான் வசிக்கும் பட்டியின் தடுப்பாய்
உங்கள் சட்டங்கள்....
எது சரி எது தவறு என்று இனி
முடிவெடுப்போம்....
தராசுகளை உங்கள் கையில்
இருந்து பிடுங்கி...
போதும் ராமர்களுக்கும் கிருஷ்ணர்களுக்கும்
நான் காத்திருந்த நிமிடங்கள்...

அக்னிப்பரிட்சைகள் அலுப்பாய் இருக்கிறது!
காதலாய் காத்திருந்து அசதி தட்டுகிறது!
புரட்டு புராணங்களும் மார்த்தட்டும் வீர வசனங்களும்
வெட்டித்தான் போடுகிறது
எஞ்சிய தனங்களை...
மாதமொரு முறை மாறும் சமூகநெறி
மாறாமல் ஏற்றும் இதயத்தில் படிமத்தை...

பாதிநேரம் உங்கள் பல்லிடுக்குகளில்
சிக்கி என் கற்பு காரை தான் படிகிறது...
விமர்சன வரைமுறை கோடுகள்
உங்கள் நாக்குகள் தாண்டி எம் படுக்கையறைவரை!
தடித்த பேச்சுகளில் பொசுங்கி போயே விட்டது
எஞ்சி இருந்த கருணையும்...

பெண்ணெனில் இப்படி தான் இருத்தல் வேண்டும்
என பழுத்த கல்வெட்டுகளை கழுத்தில் மாட்டி,
விழிமுட்டும் ஏனைய உயிர்களுடன்
தாயாய், தாரமாய், தாசியாய் மாறி
இனி கால் பதித்து நிற்க தரைகள் அற்று
வேரருந்து மிதக்கிறேன்
என் சுயங்கள் கிழிந்து!

ஏகாந்தங்களும் மந்தகாசங்களும்
புத்தகஏடுகளில் மக்கிப்போக...
ஊழிப்பெருக்காய் கண்ணீர்
மாராப்புகளை அடித்துப்போக...
கனவுகளாய் நிஜங்களும்
நிஜங்களில் நினைவிழந்தும்
தவித்து போகிறது உயிர்பரப்பு...

நா உலர்ந்து போகிறது...
பெண்ணியங்களும் உடலரசியல்களும்
பேசி பேசி...
என் அன்பு ராமரே!
என்னை அக்னிகுண்டத்தில் ஏற்றும் உன்னகத்தே
இன்று என்ன கேள்வி?
நன்கு தெரியும் எனக்கு ...
சோரம் போனது என் உடலா என் மனமா...
இது தான் அல்லவா
பதில் எதுவாய் இருப்பின் மனம் அடங்குவாய் நீ...
இன்றைய என் பதில் சஞ்சலம் தீர்ப்பினும்
உன் நாளைகளில் புதிய கேள்வியுடன் நீ நிற்பாய்
அது சாஸ்வதம்...

கோகுலமோ அயோத்தியோ எனக்கு வேண்டாம்
அங்கீகாரம் கொடுக்கும் பெயரோ வேண்டாம்...
தனிமைகளில் வெதும்பி கற்பனையில்
என் நாட்கள் ஓட...
நான் நடக்கும் இன்றைய பாதையில்
நேற்றைகள் இருளாய் படிய
நாளைகள் முள்ளாய் அவதணிக்க
வெளிச்சம் தொலைந்த விண்மீன்கள்
மட்டுமே துணையாய்...

சிரிப்புகளின் ஊடே நிர்ச்சலனங்களற்ற
என் பாதுகாக்கப்பட்ட கடந்தக்கால வெளிகள்...
கால்கள் தாண்டி ஓடிய பட்டாம்பூச்சி வாழ்க்கையை,
யாருமற்ற அடர்தனிமையில் உதிரும் மயிர்களின் ஊடே
எண்ணித்தான் பார்க்கிறேன்!
ஒன்றுமே அற்ற சூனியத்துக்குள்
இருந்து விடுபட
அசோகவனத்தில் ஒதுங்குகிறேன்
மாளிகைக்கு மயானங்களே மேலென்று!!!!!

Wednesday 4 April 2012

கி.பி 3012 .....

 
ஏறக்குறைய 
ஆயிரம் வருடங்களுக்கு முன்.....

கனவுகளின் 
சாம்ராஜ்யங்களின்  
உன்னத காலம்........!
மனித மனங்களினால் 
காதலுக்கு 
பட்டடை சூடி 
மனம் மகிழ்ந்த 
பொழுதுகள்....
சிலர் வாழ்க்கையை 
வென்றார்கள் ...
சிலர் தோற்றார்கள்...!
சிலர் தொலைத்தார்கள்.....!
அவர்களின் அன்றைய
கனவுக்கவிதைகளை
அடுத்து வரும் 
கவித்தொகுப்பில்
காணலாம்......!
       *
உன்
நினைவுச்சுவர்களில்
புரையோடினேன்...
கவிதைகளால் 
அரித்தும் விட்டேன்.
இன்னும் ஏன் 
உறக்கம் 
உன் விழிகளில்.....!
          *
கடிகாரத்துடன்
சுற்றினேன் 
நாட்காட்டியுடன் 
தினமும் 
கிழிக்கப்பட்டேன்
இழந்தவைகள்
இளமைகள் தான்.....!
         *