Tuesday 28 February 2012

நானும் என் சுவர்களும்!!!



அறைக்குள் நுழைந்ததும்
என் சுவர்கள் என்னை இழுத்து அணைக்கிறது!
எப்படி போயிற்று இந்த தினம் என்று கேட்டபடி...

சிகப்பு சுவர் சொல்கிறது கருப்பு சுவரிடம்
இப்பதானே வந்தாள்...
செருப்பையாவது கழட்டவிடேன் என்று!

அழுகையோடு என் சுவர்களை பார்த்து சொன்னேன்
இன்றைய தினம் சுகமில்லை என்று!
எந்த சுவரிலும் சாயாது அறையின் மத்தியில் நின்று..

தினமும் என் பகல் முடிந்ததும் என் சுவர்கள்
துணையோடு தூங்குகிறேன்
என்னை அணைக்க போட்டிகளோடு தாலாட்டும் அவை!

காகிதத்தில் சிக்கா எழுத்துக்களால்...
காதுகளுக்கு போய் சேரா வார்த்தைகளால்...
பார்வையில் பதியா முகங்களால்...

என் இன்றைய தினமும் நிரம்பி வழியத்தான் செய்கிறது!
இன்னமும் வெற்றிகரமாய் வெறுமைகள் மட்டுமே
நிரப்புவேன் என் பேச்சில் மற்றவர்களிடம்!

என் நிர்வாணம், என் அழுகை, என் திமிர்,
என் திருட்டு, என் கோபம், என் பசி
எல்லாம் பார்த்தும் சுவர்களுக்கு என்மேல் தீராக்காதல்!

நிழல் உண்மைகள் எல்லாம் தெரிந்த சுவர்
என் பட்டாம்பூச்சியை கூட்டுப்புழுவாய் மாற்றும்!
இரவுகளில் என் அறை என்மேல் மடிகிறது...

வரண்ட செங்கலில் கூட எனக்கான காதல் மிச்சமிருக்க
என் நாட்களின் ஆசைகள் எல்லாம் வடியும் அவைகள் மேல்...
என்றும் காதலனாய் எனக்கு என் சுவர்கள் மட்டும் போதும்!

Monday 27 February 2012

மருத்துவம்....

 

என்
நினைவுத்தூரலில்
நனைந்ததால்   
ஏற்பட்ட 
தும்மல் இது.......!
தேவையில்லை
வைத்தியம் ஒன்றும்....!
என்னை
நினைத்தாலே 
போதும்..........♥

ஹைக்கூ-3

கன்னக்காயங்களுக்கு
வைத்தியம்  கேட்டேன்
செருப்பு தைப்பவனிடம்.......!!! 

ஹைக்கூ - 2

தும்மலுக்கு மட்டும்
நான் வைத்தியரிடம் செல்வதில்லை.......
அடிக்கடி நீ நினைப்பதால்.....!!!

பறக்கும் தட்டு.....

அவசரப்பட்டு 
உன்
நினைவுகளில்
தரை இறங்கினேன்.....!
நீயோ
அச்சப்பட்டு
வேற்றுக் கிரகவாசி 
ஆக்கி விட்டாய்.....!!!

Sunday 26 February 2012

மலரே....!

 




மலரே...!
உன் கனவுகளில் 
வந்து 
எனது கனவும்
கவிதை சொல்லும்...!
கவிதை சொல்லியே
தினம்-உன்னை
துயிலெழுப்பும்.....!
பூபாளமெல்லாம்-உன்
புன்னகையில் 
பூக்குமென்று
அறிந்து தான்
செடியாக பலமுறை
தவமிருந்தேன்........!
பூத்தது என்னவோ 
உண்மை தான் !
உதிரும் 
காரணம் தான்
இன்னும் 
புரியவில்லை....!     
                 

ஹைக்கூ ......

உன் கண்ணீர்த்துளி பிரசவித்தவுடன்
சிரித்துக்கொண்டே மடிகிறது
என் எண்ணப்பூக்கள்.......

Saturday 25 February 2012

இரவுகள்


நினைவுகள்
இருக்கும் வரை 
மரணங்கள் இல்லை...!- இரவுகள்
 இறந்தாலும்-கலையாமல்
வருவேன்
கனவுகளில்.....!
                
காரணங்கள் 
சொல்வதற்கு
வாழ்வின் பயணங்கள்
காத்திருப்பதில்லை.....!
                
வரும்
ஒவ்வொரு நொடிகளும் 
மரணத்திற்கான 
முகவுரையே.....!
               
முடிந்தவரை
முகர்கின்றேன்
உன்
முடிவில்லா
கனவுகளை.....!
             

            


 

Thursday 23 February 2012

நிஜங்கள் ....

 
என்
எழுத்தை
நேசித்தவளுக்கு
என்
விரல்களின்
விண்ணப்பம்.....!
         *
நிஜங்களை
உணர்ந்து கொள்
என்
நிழலுக்குள்.......!
        *
உன்
உயிருக்குள்
என் உயிர் 
இருப்பது
இன்று கூட
தெரியாதிருக்கும்
உனக்கு........!
        *
என்
நினைவில்
கையெழுத்திட்டுப்பார்        
உன்
கண்களில்
கண்ணீர் வரும்........!
         *
உன் மனதை
தொட்டுப்பார் 
நான்
துடித்துக் கொண்டிருப்பேன்......!
         *  
     

Wednesday 22 February 2012

நீ மட்டும்...

 
ஓவியமலருக்கு 
விரல்கள் மட்டுமல்ல
விழிகளும் 
வேண்டும்......!
எனக்கு
உன்
நினைவு மட்டும்
போதும்....!  

விழிமொழிகள் ...

 

என்
கண்களை
விற்று-உன்
கவிதையை
வாங்கினேன்...!
               *
வாங்கிய கவிதையை
கனவினில்
ஆய்வு செய்தேன்...! 
             *
ஆய்வு
செய்ததால்
இன்று
கவிஞனாகிவிட்டேன்....!
            *
ஏனோ 
கவிதைகள்
மட்டும்
கண்களுடன் 
நின்று விடுகிறது....!
              *
உன்னைப்போலவே ......!! 
              *       

Tuesday 21 February 2012

உயிரே

தென்றலுக்கு 
எதிராகத்தான்
வழக்கு
தொடர்ந்தேன்....
ஏன்
நீ
உதிர்ந்தாய்....?
நீ
உதிர்கையில்
ஏன்
நிழல்கள்
தாங்கியதை
நீ
அறிந்திருக்க
நியாயமில்லை.....!      

Sunday 19 February 2012

இறகுகள்


இறகுகளால்
தான்
ஓவியம் வரைந்தேன்-ஏன்
நினைவை விட்டு
பறந்தாய்.......!  

Saturday 18 February 2012

விழிகள்

14 -12 -2009 இல் ஆக்கப்பட்டது.
               *
புறப்பட்டுச்சென்றேன்
புரியாத
நினைவுகளுடன்!
               *
கவிதைக்கு
சலங்கை கட்டி
கனவுகளுக்கு
மெட்டி போட்ட
உன்
மெழுகு நினைவுகள்!
              *
எனது கவிதை
கண்ணீர் வடித்தது
என்
விழிகளுக்காய்!
             *
விளக்கிழந்த
என்
வாழ்வில்
ஒளியேற்றும்
வெள்ளோட்டம்
வருமோ நாளை
என்ற
ஏக்கம்
என் கவிதைக்கு!
              *
எது நிற்குமோ
தெரியவில்லை!
கடிகாரமும்
என் இதயத்துடன்
போட்டியிட்டபடி!
              *
 
                

Friday 17 February 2012

குடை.

 
 
உனது குடையை
தலையணையில்
வைத்து
தூங்கினேன்.........
கனவில்
பெய்தது
மழை.......................!

கனவுப்பூக்கள்

சுவாசமே!
என் சிறகுகளுக்கு 
தென்றலை மட்டும்
தூதனுப்பு ........!
          *
மலர்களால்
நீ
தூவும்
வாசலுக்குள்
என்
உயிர் வந்து
செல்லும்.....!
           *
நீ
அறியாமல்
காத்திருப்பாய்
நான் வந்திருந்தும்....!
              *
திரும்பிப்பார்...!
           *
பலமுறை
கொல்லப்பட்டேன்
உன் 
நினைவுகளால்.......!
மறுபடியும்
உயிர்த்தெழுந்தேன்
உன்
கனவுகளால்...!
           *   
இங்குள்ள 
ஒவ்வொரு எழுத்துக்களும் 
ஒரு வகையில்
கல்லறைகள் தான்.....!
            *
காணிக்கையாக்க 
உயிர் 
ஒன்றுதான் 
உடலுடன் உரிமை
பேசியபடி
புரட்சி செய்கிறது.....!
              *
நேசங்களுடன் 
விழிகளும்
அடிக்கடி விம்மியபடி ...!
விரல்கள் மட்டும்
கவிதைகளுடன்
ஆறுதல் சொன்னபடி....
உனக்கும் எனக்கும்.............!!!    
        

Thursday 16 February 2012

காணாமல் கரைந்தவர்களின் குளம் !


இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!

இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!

கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!

நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!

Wednesday 15 February 2012

நிலா மலர்

 
சிநேகமே...!
நீ
என் கவிதையா?...
இல்லை நீ-என்
கனவா?... 
வரும்
வார்த்தைகளால்
வலம் வந்தேன்..
கோர்த்தும் பார்த்தேன்...
விடைகளுக்கு
இங்கு எல்லாம்
கேள்விகளே
பதிலானது..!!!     

தேடி!!!....................

வந்து வந்து வெறுமையாய் திரும்பி செல்லும் கடலலை!
ஆளின்றி காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல்!
ஏதோ சூட்சமத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கடிகார பெண்டுலம்!
காய்ந்து உதிர்ந்து கருகும் வரை எங்கெங்கோ அலையும் இலை!
இது போன்ற ஏதோ விசையாக சுழல்கிறாய் என்னுள்...

என் மனதின் கைப்பிடி என் கைக்குள் சிக்கி தடுமாறும்!
ஒருகணம் உன்னை கைதியாக்கி நானே எனக்குள் இடுகிறேன்..
மறுகணம் நானே உன் நினைவுகளை பெறுக்கி வெளியே எறிகிறேன்..
உள்ளிருக்கிறாயா? வெளியேறிவிட்டாயா?
உனக்குள்ள குழப்பம் தான் எனக்கும்!



உன் நினைவுகள் மட்டுமே எனக்கான நங்கூரம்!
இன்றைய ஓட்டங்கள் முடிந்து நான் சுருண்டு உறங்குவதும்
உன் சிரிப்புக்குள் மட்டும் தான்!
எனக்கான தேவைகள் உன் தேவைகளின் கழுத்தை கவ்வி
ரத்தம் உறிந்து கொன்றுவிடும் பெருவல்லமை கொண்டவை!

கைக்குள் வைத்திருக்கிறேன் உன்னோடு கண்ட நிறங்களை..
நீ காட்டிய தெரியாத உலகங்களில் வாசத்தோடு சேர்த்து!
எனக்காக என்னோடு இருந்த உன்னை
உனக்காக வேண்டி பறக்கவிடுகிறேன்
பட்டமாக அல்ல பருந்தாக!

என்னுடைய கனவுகள் முழுக்க உதிர்ந்துவிட்டதால்..
உனக்கான கனவுகளை தேடிக்கொள்வாய் என்ற
வேண்டுதலோடு.... 

இரகசியமாக.......

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும்
தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது 
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...

இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த 
தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..



இசையில் புத்தகங்களில் இருக்கும் வகைமை 
வாழ்விலும் மனிதர்களிலும் இருக்கும் போல...
இத்தனை பயணப்பட்டும் மனிதர்கள் 
இன்னும் புதிராகவே தெரிகிறார்கள்..

சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் 
மத்தியில், மிருதுவான குளிரோடு 
ஒற்றை பனித்துளியாய் இறங்கி 
நெகிழவைக்கிறாய் தோழா...................


ஓவியம்

சிலைகளுக்குத்தான்
கவி
சொல்லி கொடுத்தேன்..
நீ
ஏன்
சிலையாக
நின்றாய்.....    

Tuesday 14 February 2012

காதலை கழட்டிவிட அரிய 10 வழிகள்

காதலை சொல்ல முரளி எவ்வளவு கஷ்டப்பட்டரோ அதை விட கஷ்டம் காதலை முறிக்கிறது. காதலுக்கு உள்ள போறது கூட போயிடலாம்..கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்ண வேணும், ஆனா இந்த காதலை விட்டு வெளிய வர ஹாட் வொர்க் பண்ணாதே..! அதால இந்த வலண்டைன்ஸ் டே சிறப்பு வாரத்தில காதலில் சொதப்புவது எப்படி எண்டு ஒரு அறிய 1o வழிகள்..காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னத்துக்கும் எதிர்காலத்தில யூஸ் ஆவுமே..?!? ( சில ஐடியாக்கள் உருவானவை, சில ஐடியாக்கள் உருவப் பட்டவை )

10 ) பேஸ்புக் இல் ' இட்ஸ் காம்ப்ளிகேடட்' எண்டு ஸ்டேடஸ் போடவும். எப்பிடியும் உங்க லவர் இற்கு மூணாவதா ஒருத்தி இருக்கிறாளா, நயன்தாரா மாதிரி என்ட்ரி குடுக்கிறாளா எண்டு மூக்கு வேர்த்திடும். பிறகென்ன..கொஞ்ச நாளில சண்டை ஆரம்பிச்சிடும்.

09 ) லவர் கால் பண்ணிற நேரமா பார்த்து உங்க மொபைல் இல கஸ்டமர் கேர் இற்கு போன் பண்ணி பேசுங்க. நீங்க நாலை அழுத்தி, மூணை அழுத்தி ,ஏழை அழுத்திறதுக்குள்ள அங்க அவங்களுக்கு வெய்டிங் எண்டு போகும்.. பிறகென்ன..உங்க ஏழரை விலக போகுது எண்டு அர்த்தம்!


08 ) முதல்ல பைக் இற்கு பெட்ரோல் போடுறத நிப்பாட்டுங்க..அவங்க அப்பன் வீட்டு காசா?! எங்க போகணுமாம்? எல்லாத்துக்கும் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ண பழகுங்கப்பா.. பஸ்  இல ஏத்தி அவங்கள எங்கயாவது கூட்டிப்போனீ ங்க எண்டா உங்க காதலும் ரிவேர்ஸ் கியர்ல போகும். மத்த இடங்களிலையும் அப்பிடி இரு பஸ் சேர்விஸ் இருக்காதா என்ன?

07 ) ' மயக்கம் என்ன?' பார்த்தீங்க இல்ல? உங்க பிரெண்ட் ஐ போல யாரு மச்சான்? அப்பிடி ஒரு பிரெண்ட் ஐஉங்க லவர் இற்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வையுங்க...இதுக்கு தான் சொல்றது ஒவ்வொரு பிரெண்ட் உம் தேவை மச்சான்!


06 ) எப்பவாவது கவிதை எழுதி இருக்கீங்களா? என்னது, கவிதை படிக்கிற பழக்கமே இல்லையா? குட்..அப்ப ஒரு பேனா பேபர் எடுத்து எழுதுங்க.. அண்ணன் அறிவுமதி, மு.மேத்தா எல்லாரும் தலை குனிஞ்சு நிக்கிற அளவுக்கு, நா.முத்துக்குமார் , வைரமுத்து எல்லாரும் இரத்தக்கண்ணீர் வடிக்கிற அளவுக்கு நீங்க காதல் கவிதைகளா வடிங்க.. இடை இடையில மானே தேனே..பொன் மானே எல்லாம் போட்டுக்கணும்.. உங்க கவிதை..ஹைக்கூ..இல்ல காவியம்னே வச்சுக்கலாம்..அதை எடுத்து நீட்டுங்க..நைட் படிச்சிட்டு காலைல உங்களுக்கு கால் வரும் அவங்க கிட்ட இருந்து..உங்க காதில ப்ளட் வரும், பஞ்சு ரெடியா வச்சுகோங்க. அப்புறமா உங்களுக்கு காதல்ரத்து நோட்டீஸ் வரும்.

05 ) உங்க லவர் இற்கு உண்மையா இருக்கணும் பாஸ் நீங்க. பெர்பியூம் போடுறத முதல்ல நிறுத்துங்க. உங்க டிரஸ் ஐ எத்தின நாளைக்கு ஒரு தடவை தோய்க்கிறீங்க எண்டத அவங்களுக்கு சொல்லுங்க. நீங்க கல்வின் க்லீன் , ஜாக்கி தான் போடுறீங்க எண்டு அநியாயத்துக்கு நம்பிட்டு இருப்பாங்க. நீங்க பட்டாபட்டி தான் என்றத முதல்ல தெரியப்படுத்துங்க. அப்புறம் உங்க பாங்க் புக், சாலரி ஷீட் எல்லாத்தையும் அவங்க கிட்ட காமிங்க.

04 ) அப்புறம்..நீங்க மாறணும்..எல்லாத்தையும் மாத்தணும்..ஆஅ..ஆ..கமல் எபக்ட் போட்டது காணும். உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ஐ நீங்க மாத்தணும். இதுக்கு நீங்க டோலிவுட் படங்களா பாக்கணும். இல்லாட்டி ' ஒரு கூடை சன்லைட்' பாட்டில நம்ம ரஜினிகாந்த் போட்டிருப்பாரே, அந்த மாதிரி ஒரு கலர் காம்பினேஷன் இல டிரஸ் பண்ணனும். புருவத்தில கம்மல் போட்டுக்கலாம். ஒரு பீர் டின் எடுத்து கம்மலா போட்டுக்கலாம். இந்த மாதிரி.. த்ரிஷா , நயன் மட்டும் தான் டாட்டூ குத்துவாங்களா?!? நீங்களும் உங்க கேர்ல் பிரெண்ட் பேரை ( இப்ப இருக்கிறவங்க இல்லை! ) உங்க பாறாங்கல் மார்பில பச்சை குத்திகோங்க!

03 ) லவர் ஐ சினிமா பார்க்க கூட்டி போவீங்க இல்ல..? ஆனந்தத்தொல்லை பட டிக்கட் இப்பவே ரிசேர்வ் பண்ணி வைச்சு கூட்டி போங்க! இல்லாட்டி, பாருங்க இப்ப விஜய் காவலன், நண்பன் எண்டு அடக்கி வாசிக்கிறார்.. கொஞ்சம் பொறுங்க, எப்பிடியும் கொஞ்ச நாளில மெட்ராஸ் இல ரவுடிங்க அட்டகாசம் அதிகம் ஆய்டும்..அப்ப அவர் கிராமத்தில இருந்து அரிவாளோட ரவுடிங்கள அழிக்க புறப்பட மாட்டாரா? அந்த டைம் இல வேட்டைக்காரன், சுறா இந்த மாதிரி படங்களா நடிப்பார். அந்த டைம் பார்த்து அவங்களை விஜய் படத்துக்கு கூட்டிப்போநீங்க எண்டா அவங்க உங்கள மறக்கவே மாட்டாங்க..அதாவது மறந்தும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.

02 ) பேசாம நேர போய் அவங்க அம்மா அப்பா கால்ல தடார்னு விழுந்து எங்களை எப்பிடியாவது சேர்த்து வைங்க எண்டு கேளுங்க. அப்ப உங்க லவர் தானாவே உங்களை வேணாம் எண்டு சொல்லிடுவாங்க..ஏன்னா..நிறைய பொண்ணுங்க எப்பிடியும் நம்ம காதலை அம்மா அப்பா பிரிச்சு வைச்சிடுவாங்க எண்ட நம்பிக்கையில தான் லவ் பண்ணவே தொடங்கிறாங்க..

01 ) கடைசி ஒரே வழி தான் இருக்கு... ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து உங்களுக்கு கிளிசாரினோ லூகேமியனா இலியானோ போபியா அப்பிடின்னு ஒரு எய்ட்ஸ் ஐ விட பயங்கரமா ஒரு வியாதி இருக்கு, இன்னும் எண்ணி முப்பது நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே உனக்கு தாலி கட்டி ஒரு நாளாவது உனக்கு கணவனா வாழ்ந்து பாக்கணும் எண்டு டைலாக் விடுங்க. அவங்க அடுத்த நிமிஷம் அப்பீட் ஆகிடுவாங்க!


என்ன பாஸ்..இவ்வளவு பண்ணியும் முடியலையா..! அப்புறம் கமல், சித்தார்த், பிரபு தேவா இவங்கள வாழ்க்கையில பாலோ பண்ண முடியாட்டியும் ட்விட்டர் இலாவது பாலோ பண்ணுங்க.... அதுக்கு அப்புறமும் உங்க தலையில அப்பிடி எழுதி இருந்தா நாம ப்ளாக் எழுதி அதை மாத்தவா முடியும்?! எனி வே லக்கி பாஸ் நீங்க.. இப்பிடி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க குடுத்து வைச்சிருக்கணும்..என்ஜாய்!

யுத்த ஓலை

மலரே!
உனது இதழ்களால் 
என்
கவி இதழுக்கு
வாழ்த்து கூறு..!
மலர மறுத்தால் 
இரவை 
கொன்று விட்டு
கனவுச்சிறைக்கு
சென்றிடுவேன்....!   

நினைவு

இறகுகளால் 
கவிதை 
எழுதி
பறந்தேன் 
ஆகாயத்தில்...
நிலவாக-நீ
தொட்டுச்சென்றாய்......!    

Monday 13 February 2012

நிஜம்

கவிதைகளால்
எனக்கு
பாதையமைத்தேன்....
பாலமாக
நீ
வந்தாய்....!   

நிலா முகம்...

நிலா முகம்...

உன்
நினைவின்
நிழலாக
எனது கவிதை....
நீ
பறப்பதால்
சிறகுகள்
தேவையில்லை....
நீ
நினைப்பதால்
கனவுகளும்
தேவையில்லை.... 

Sunday 12 February 2012

ஆதலினால் காதல் செய்வீர்....!



" காதல் ஒரு பப்ளிக் டோய்லட் மாதிரி...
உள்ளே இருப்பவர்கள் எப்படா வெளியே வருவோம் என்றுநினைக்கிறார்கள்...
வெளியே இருப்பவர்கள் எப்படா உள்ளே போவோம் என்றுநினைக்கிறார்கள்...."

இது ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு. சிரிக்கவைத்தாலும் எல்லா காதலர்களும் அப்படி அல்ல. காதலைவரைவிலக்கணப் படுத்த எல்லோரும் முயன்றாலும் அது கைக்குள் சிக்குகிறபாடாக காணவில்லை. சங்க காலத்திலிருந்து பின் நவீனத்துவ காலம் வரைகாதலை பாடாத கவிஞர்களும் இல்லை. 'காதலிக்க நேரமில்லை' , 'காதலுக்கு மரியாதை ' என்று தொடங்கி 'எங்கேயும் காதல்' வரை காதல்பற்றி வந்த படங்களின் எண்ணிக்கை எக்கச் சக்கம். ரொமாண்டிக்ஹீரோக்களுக்கும் காதலிக்கலாம் போல தோன்றுகிற ஹீரோயின்களுக்கும்தனி இடம். ' காதல் மன்னன் '(ஜெமினி- திரையிலும் நிஜத்திலும்?), 'காதல்இளவரசன்' (கமல், பிரஷாந்த்) என்று பட்டங்கள் வேறு. காதல் காட்சிகள்என்றாலே இப்பவும் மாதவன் தான் முதல் இடத்தில் என்கிறார்கள். அதேபோல பக்கத்து வீட்டு பெண் இமேஜ் இருக்கிற கதாநாயகிகளுக்கும் ( கவர்ச்சிஇல்லா விட்டாலும் கூட ) தனி மவுசு. ( சினேகா, அசின் ). காதல் பற்றி வந்தபுத்தகங்களும் ஏராளம். மில்ஸ் அண்ட் பூன் தொடங்கி ரமணிச்சந்திரன்நாவல்கள் வரை வெளியான ரொமாண்டிக் நாவல்களும் அதிகம்.

இப்படி எல்லோரும் பேசும் அளவுக்கு காதலில் என்ன இருக்கிறது? காதலில்பல வகை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்ணோடுகண்ணினை கலந்தற்றே என்று வருவது இன்ஸ்டன்ட் காதல். நவீனபாஷையில் சொல்லப் போனால் கண்டவுடன் மூளைக்குள் மின்குமிழ்எரியும். மனதிற்குள் மணி ஒலிக்கும். பிரிதிவிராஜ் இற்கு ஜோதிகாவைக்கண்டதும் நடந்தது மாதிரி. ( படத்தில் தான்....குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணி விடாதீர்கள் !) சிலருக்கு எக்ஸ்ட்ராவாக வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகூட பறக்கும். ( கொலரா அறிகுறி?).

இதெல்லாம் சற்று மிகைப்படுத்தப் பட்டது போல தோன்றுகிறது. முதல்பார்வையில் ஒரு சின்ன ஈர்ப்பு ( attraction ) வரலாம். ஆனால் காதல்?பலருக்கும் கொஞ்சம் பொதுவான சந்திப்புகள் நடந்தபின்பே காதல்வருகிறது. பார்க்காத காதல், பேசாத காதல் என்று சினிமாவின்சுவாரசியமான பூச் சுற்றல்களைத் தாண்டி, படிப்பு, மதம், ஏன் ராசி,நட்சத்திரம், இதெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அதன் பின் தைரியமாககாதலில் விழுபவர்களும் இருக்கிறார்கள். காதலிக்க அப்போது தான்தொடங்கி இருப்பவர்களை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொருகுறுந்தகவல் வரும் போதும் அழைப்பு வரும் போதும் முகம் பரவசம்அடையும். தனியே சென்று கதைப்பார்கள். கூட்டம் இருந்தால் ஒற்றைவார்த்தைகளில் கதைப்பார்கள். பெயர் ஒற்றை எழுத்தில் அலைபேசியில்சேமித்து வைக்கப் பட்டிருக்கும். யார் என்று கேட்டால் முரண்பாடானபதில்கள் வரும்.

பொதுவாகவே எல்லாக் காதலர்களும் ஆண் பெண் பேதம் இன்றிpossasivness உடையவர்களாகவே இருக்கிறார்கள். தன் காதலி/காதலன்எதிர்ப் பாலாருடன் கதைப்பதை நிச்சயமாக வெறுக்கிறார்கள். தாங்கள்சொன்னதை சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறார்கள். தாமதமாக வந்தமைக்கோ அல்லது தொலைபேசியில்அழைக்கும் போது பதில் அளிக்காமைக்கோ சண்டை போடாத காதலர்களைநீங்கள் கண்டிருக்கிறீர்களா?

எல்லாக் குறும்புகளும் பரவசங்களும் கொஞ்ச காலத்தில் தீர்ந்து விடும்.கதைக்க வேண்டிய எல்லாவற்றையும் ஒரு வருடத்திற்கு உள்ளாகவேகதைத்து முடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு இதுவரை கவனித்திராதகுறைகளும் பெரிதாகத் தென்படத் தொடங்குகிறது. இது சரி இது பிழைஎன்று சீர் தூக்கிப் பார்க்க முடிகிறது. கல்லூரிகளில் தொடங்கும் காதல் சிலமாதம் பல்கலைக் கழகங்களில் தொடங்கும் காதல் சில வருடங்கள் என்றுமுடிந்த எத்தனையோ காதல் கதைகளை நீங்களும் கண்டிருக்கலாம்.கல்யாணத்தில் முடிந்த காதலும் நிறைய உண்டு. கல்யாணத்தின் பின்முறிந்த காதலும் உண்டு. ஆறு , ஏழு வருடங்கள் விரட்டி விரட்டி காதலித்து, கல்யாணம் பண்ணி, பிறகு விவாகரத்து வரைக்கும் போகும் போது, எங்குதப்பு நேர்ந்தது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கவிதை ( இதுவும்இரு வார இதழில் இருந்து )

"எல்லா காதலர்களும் ஒரு நாள் அழுகிறார்கள்...
சிலர் பிரிந்ததற்காக.....
சிலர் சேர்ந்ததற்காக....."


திருமணம் வரை காத்திருக்காமலும் கருத்து வேறுபாடுகளால் பிரிகிறார்கள்.அப்படிப் பிரியும் போது அது வரை காதலித்த காலங்கள் வீணடிக்கப் பட்டுவிடுகின்றன. அல்லது அடுத்த முறை விடக்கூடாத பிழையை காட்டித் தந்துவிட்டு செல்கின்றன. காதலர்களில் ஒருவரின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது,அபிப்பிராய பேதங்கள் மெல்ல வளர்ந்து உருவெடுத்து ஒரு கட்டத்தில்முற்றி வெடிக்கும் போது பிரிவு நேரிடுகிறது. இன்னொரு வகைப் பிரிவு தான்மிகவும் கொடுமையானது. மதம், சாதி, பணம், ஜாதகம் போன்ற பலகாரணிகளில் ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி பெற்றோர் அனுமதி மறுக்கும்போது தான் தாங்க முடியாத துயரத்தைச் சந்திக்க நேரிடுகிறது. சிலர் தாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். S.J.சூர்யா ஒருமுறை பேட்டி ஒன்றில் சொன்னது போலசிலர் alcoholic ஆகவும் சிலர் workaholic ஆகவும் மாறுகிறார்கள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்கப் போவது இல்லை, காதலில் வெற்றிபெற்றவர்கள், தோற்றுப் போனவர்கள், எல்லோருக்கும் சேர்த்து காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அதே அளவு நேரம், அதே அளவுமணித்துளிகள். காலம் காயங்களை மாற்றுகிறது, அல்லது அதன் தாக்கத்தைகுறைக்கிறது. முடிந்து போன காதலை விட இன்னும் அழகான காதல்உங்களுக்காக எங்கேயோ காத்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே, மீண்டும்தலைப்பை படிக்கவும்.

( தலைப்புக்கு நன்றி, பாரதியார்,மற்றும் சுஜாதா!)

மண்டை ஓட்டுக் குகையும் மாயாவியும்

தனிமையில் துணைவர இப்போது எல்லோருக்குமே பல விடயங்கள்இருக்கின்றன. பேஸ்புக் ( தமிழ் அன்பர்கள் மொழியில் முகப் புத்தகம். அப்படிஎன்றால் twitter ஐ தமிழில் எவ்வாறு எழுதுவது? கூவி என்றா? ) மற்றும்இணையம், அரட்டை, தம், தண்ணீர், பண்பலைகள், தியேட்டரில் புதுப் படம்என்று நிறைய இருக்கிறது. ஆனால், இந்த வசதி எதுவும் கிடைத்திராதகுழந்தைப் பருவங்களில் பலருக்கும் கதைகள் தான் துணையாகஇருந்திருக்கும். சிலர் பிறக்கும் போதே கதை சொல்லுபவர்களும் பிறந்துவிடுகிறார்கள் அவர்களுக்காகவே. பலருக்கும் கதாபாத்திரங்கள்புத்தகங்களில் இருந்து நேரடியாக எழுந்து வந்து உலாவுவார்கள்.

நீங்களும் சிறிய குழந்தையாக இருந்த போது பெட் டைம் ஸ்டோரீஸ் (இதை நிச்சயம் தமிழ்ப் படுத்த முடியாது ) என்ற தலைப்பில் சில வழுக்கல்அட்டைப் புத்தகங்களைக் கண்டிருப்பீர்கள். இந்தக் கதைகளில் வருபவர்கள்பெரும்பாலும் ஆங்கிலக் கதாநாயகர்கள், நாயகிகள். மதராசப் பட்டினம் எமிஜாக்சன் போல ஒரு மெல்லிய அழகி சின்ட்ரெல்லா. இவளைத் தேடிஒற்றைக் கால் செருப்புடன் அலையும் இளவரசன். நாயகி கூந்தலைஅவிழ்க்க, அதைப் பிடித்து மாடிகளைக் கடந்து வரும் இன்னொருஇளவரசன். உறங்கும் அழகியும் அவளுக்கு உதவி செய்யும் குள்ளர்களும்என்று அது ஒரு விசித்திர உலகம். இளவரசன் வந்து முத்தமிட்டு எழுப்பும்வரை மீளாத் துயிலில் இருக்கும் இளவரசி. அவரை விதைகளைக் கொண்டுவந்து விதைத்ததும் அவரைக் கொடி வானை முட்ட முளைத்து அதில் ஒருமாளிகை, அதில் நிறையப் பணத்துடன் இருக்கும் ஒரு சூனியக்காரி. இந்தக்கதைகளில் ஒரு அடிப்படை விடயம், இதில் எல்லாவற்றிலுமேசூனியக்காரிகள் இருப்பார்கள். இவர்கள் அழகிய யுவதிகளைக் கொடுமைப்படுத்துபவர்களாகவும் சிறுவர்களை அடுப்பில் உட்கார வைத்து சமைத்துசாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். இந்தக் கதைகளைக் கேட்டே பலரும்இரவில் எழுந்து அலறி ஓடியிருக்கக் கூடும்.

கொஞ்சம் வளர்ந்ததும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற புத்தகங்கள்புழக்கத்துக்கு வந்திருக்கும். நீங்களும் அம்புலிமாமா வேதாளத்துக்கு அந்தநாளில் ஒரு ரசிகராக இருந்திருக்கக் கூடும். அம்புலி மாமாவில் எப்பவும்அந்தத் தொடர்கதைக்கு ஒரே படம் தான். விக்ரமாதித்தன் ஒரு கையில்வாளுடன் தோளில் வேதாளத்தைச் சுமந்து செல்லும் படம். விக்ரமாதித்தன்மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வர்ணத்தில் உடைஅணிந்திருப்பார். வேதாளம் நீட்டி முழக்கி கதை சொல்லி விட்டு ஏதோகல்லூரி பேராசிரியர் போல கேள்வி கேட்கும். விடை தெரிந்திருந்தும் பதில்சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு நூறாகி விடும் என்றுஆர்.டி.எக்ஸ். வைக்கப் போவது போல மிரட்டல் வேறு. விக்ரமன்ஒவ்வொரு முறையும் சரியான பதில் சொல்லி விடுவதால் வேதாளம்மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விடும். தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் அடுத்த வாரம் வந்து வேதாளத்தைச்சுமந்து கொண்டு போவார். விக்ரமன் மௌனம் கலைத்தால் வேதாளத்தைக்கொண்டு செல்ல முடியாது, அதே நேரம் பதில் தெரிந்தால் சொல்லியே ஆகவேண்டும். இப்படி ஒரு சிக்கலான புரிந்துணர்வு ஒப்பந்தம்! எப்படாமன்னனுக்கு பதில் தெரியாமல் போகும் என்று வாரா வாரம் குழந்தைகள்காத்திருந்தது தான் மிச்சம்.பாலமித்ராவில் ஒரு தொடர்கதை வந்ததுசிலருக்கு இன்னும் நினைவிருக்கலாம். ஒரு ஆண், அவனுக்கு கோபம்வந்தால், கொரில்லாவாக மாறி விடுவான். அவன் குடித்த ஒரு மருந்தின்விளைவு. இந்த கதையைத் திருடித் தான் ஹோலிவுட் இல் 'ஹல்க்' படத்தைஎடுத்தார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்!

கொஞ்சம் வளர்ந்து பள்ளிக் கூட நூலகங்களுக்கு செல்லத் தொடங்கிகொஞ்சம் உலகம் பிடிபடத் தொடங்கியதும் பலரும் முதலில் அடிமையாவதுகொமிக்ஸ் புத்தகங்களுக்கு தான். ( அதாவது 'காமிக்ஸ்') ராணி கொமிக்ஸ்உங்களில் அநேகமானவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகியிருக்கும். நீங்களும்மாயாவியின் ரசிகராக இருந்திருக்கக் கூடும். இந்த மாயாவி முகமூடியைகழட்டுவதில்லை. மண்டை ஒட்டுக் குகையில் வசிப்பார். இவர் முஷ்டியால்அடித்தால், அடிபட்ட இடத்தில் மாயாவியின் மோதிரத்தில் இருக்கும்மண்டை ஓட்டுச் சின்னம் பதியும். காட்டு வாசிகளின் நண்பன். ஹீரோ என்றகுதிரையில் டெவில் என்ற நாயையும் கூட்டிக் கொண்டு இவர் காடுகளுக்குநடுவில் பறக்கும் ஸ்டைலே தனி. அநியாயம் செய்பவர்கள், கடல்கொள்ளையர்கள், கொலை செய்யத் திட்டமிடுபவர்கள் எல்லோருக்கும்மாயாவி ஒரு சிம்ம சொப்பனம். காட்டுக்குள்ளே மாயாவி மலை முகடு,அலெக்சாண்டர் பயன் படுத்திய தங்கக் கோப்பை, சீசரின் வாள் எல்லாம்இருக்கும் ஒரு பொக்கிஷ அறை எல்லாம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதிலூக்கா ( ஒபமா மாதிரி தான் இருப்பார்!) கூட மாயாவிடம் தான் உதவிகேட்பார். டயானா என்று ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ரெக்ஸ் என்றுஒரு இளவரசன் என்று மாயாவிக்குக் குடும்பமும் உண்டு. யாருக்காவதுஆபத்து என்றால் முரசு அறைந்து காற்றில் செய்தியைப் பறக்க விடுவார்கள்.சாகாவரம் பெற்றவர் என்று எதிரிகள் அலறுவார்கள். ( உண்மையில்மாயாவிகள் பரம்பரையாக வருகிறார்கள். இது எதிரிகளுக்கு தெரியாது !)

இந்த மாயாவியின் பூர்வீகமும் மேலைத் தேசம் தான். (f)பாந்தம் மெனஸ்என்று திரைப்படமும் 97-98 காலப் பகுதியில் வந்து அங்கே பெரிய வெற்றி.இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு கௌ போய்ஸ் எனப்படுகின்ற குதிரைப்பண்ணை வைத்திருக்கும் இளைஞர்களின் கதைகள் கொமிக்சாக வரும்.அதைத் தேடி எல்லோரும் ஓடுவார்கள். இந்தக் கதைகள் பெரும்பாலும்அமெரிக்காவின் டெக்சாஸ், அரிசோனா மாநிலங்களில் நடக்கும்.வில்லன்கள் பெரும்பாலும் செவ்விந்தியர்களாக இருப்பார்கள். அதிலும்நவஜோக்கள், அபாச்சேக்கள் என்று பிரிவுகள் உண்டு. டெக்ஸ் வில்லர்மற்றும் டைகரின் கதைகள் கொமிக்ஸ் உலகில் பிரசித்தம். 'இரத்தப் படலம்'பெரும்பாலானோரின் கொமிக்ஸ் சேகரிப்புக்களில் நிச்சயம்இடம்பிடித்திருக்கும். கிட்டத் தட்ட இதுவும் பழி வாங்கும் அத்தியாயங்கள்நிறைத்த இரத்தச் சரித்திரம். அதே போல நகைச் சுவை கௌ போயாக வரும்லக்கி லுக்கின் கதைகளுக்கு சிரிக்க என்று ஒரு நாள் ஒதுக்க வேண்டி வரும். "டால்டன் நகரம்" , நீங்கள் கவலையில் அமிழ்ந்திருக்கும் போது படிக்கவேண்டிய புத்தகம்.

கொமிக்ஸ் இன் சிறப்பு என்ன என்றால், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒருரசிகர் பட்டாளம் இருக்கும். மாண்ட்ரேக் என்றால் மாயாஜாலவிரும்பிகளுக்கு பிடிக்கும். ஜேம்ஸ் போண்ட் அதிரடி மற்றும் சாகசப்பிரியர்களுக்கு. இரும்புக்கை மாயாவியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.இவரின் ஒரு கரம் உலோகத்தால் ஆனது. நினைத்த போது உருவத்தைமறைத்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு உண்டு. அப்படி மறைந்திருக்கும்வேளையில் இவரின் உலோகக் கை மட்டும் அந்தரத்தில் மிதப்பது போலபார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியும் !

நீங்களும் உங்கள் குழந்தைப் பருவங்களில் இந்தக் கதாபாத்திரங்கள்பலவற்றை உங்கள் மானசீக ஹீரோக்களாக கொண்டிருந்திருக்கக் கூடும்.இந்த வினோத உலகம் குழந்தைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமானது. இந்தப்பருவத்தில் நெருங்கியிருக்கும் இந்த ஹீரோக்கள் குழந்தைகள் வளர்ந்துபெரியவர்களானதும் அவர்களிடமிருந்து விலகி, அடுத்த குழந்தைகளைத்தேடித் போய் விடுகிறார்கள். மாயாவியும் ஹாரி போர்டரும் இருந்தஇடத்தை தல யும் தளபதியும் வந்து பிடித்து விடுகிறார்கள் போலும்! உங்கள்வீட்டுப் பழைய புத்தக மூட்டைகளுக்குள்ளும் பக்கங்கள் கிழிந்து பூச்சி அரித்தஒரு அம்புலி மாமாவோ லயன் கொமிக்ஸ் ஒன்றோ ஒளிந்து இருந்து நீங்கள்தூசு தட்டும் சமயங்களில் திடீரென்று வெளிப் படக் கூடும். அவற்றைமீண்டும் தொட்டு வாசிக்கும் தருணங்களில் உங்கள் வயதும் குறைந்து, 'தங்கக் கடற்கரையில் ஒருவர் காத்திருக்கிறார் ' என்று குரன் ( மாயாவியின்உதவி ஆள்) மாயாவிக்கு முரசு அறைந்து அறிவிக்கும் சத்தம் உங்கள்காதுகளுக்குள்ளும் மீண்டும் லேசாகக் கேட்கலாம்!

நிஜம்,,,,,,♥......

நிஜம்

விரல்களுக்குள்
சிறையான
கவிதை உனக்கு
தென்றல் அனுப்பும்
ஓலை இது.....
பூக்களை 
கைது செய்யுங்கள் 
தென்றலை
சிறையிலடையுங்கள்
நிலவினை
தூக்கிலிடுங்கள் 
கண்ணீருக்கு மட்டும்
பயந்து விடாதீர்கள்....
மதுரையை
எரிக்குமளவிற்கு 
இன்று அவர்களிடம்
கனவுகள்
இல்லை......! 

நினைவுகள்

 
வானம் சிவந்திருந்தது 
உன் முகமாய்...
தொட்டு தொட்டு
எழுதினேன் ..
தொடமுடியாத
தொலைவில் 
நீ ....!

காணவில்லை...♥


அமாவாசை 
தரிசனங்களுக்காய்
ஏங்கும்
நட்சத்திரமாய் 
எனது 
கவிதைகள்....♥....

Saturday 11 February 2012

உண்மை.. ♥



குடை
எடுத்து சென்றால்
மழை வருவதில்லை...
விட்டு சென்றால்
வந்து விடும்...
உன்னைப்போலவே....



விழிக்கைக்குட்டை...♥

உன்
நினைவின்
பெறுமதி
என்
கண்களில்
தெரியும்.........
என்
கண்களின்
பெறுமதி
தலையணைக்கு
மட்டும்
புரியும்........!!!

மாயம்..

உன்
விழிகளுக்குள்
ஒளிந்து கொண்டேன்
கனவாக வந்தாய்...
கனவுக்குள்
ஒளிந்து கொண்டேன்..
பிறையாக 
மறைந்தாய்...!  

மிலேனியம்....♥




நிறுத்தி விட்டு
உன்னை பார்த்தேன்.....
ஒரு யுகம் ஒன்று
ஒரு
வினாடியில் 
கடந்தது.......!

அகலிகை சிந்தனை......!!!



இருக்கும் 
இதயமெல்லாம் 
கல்லான பிறகு 
கல்லாக போவது 
யாராக இருக்கும்!!!!!!!!

நிசப்தம்...

நீண்ட நினைவுப்பயணங்களில்  
என் எண்ணங்கள்
நிஜம் தான்.....
நிழல்
கொடுக்க ஏன்
மறுக்கிறாய்.....
கவிதை நீருற்ற
ஏன் 
மறந்தாய்.....

Wednesday 8 February 2012

நீ....


சுவாசமே!
நீ பூக்களாக -மட்டும்
இருந்து விடு..!
முகர்ந்து கொள்ள
என் கவிதை வரும்...!
தினம்... கனவுகளில்
உன்னையே
சுவாசிக்கின்றேன்...!
மவுனங்களிலும்
என்
நினைவுகள்
சத்தமிடும்...!
கேட்பதற்கு
யுகங்களில்
யாருமில்லை....!
காரணம்
நீ இருப்பது
என்னுள் அல்லவா...!

ஒரு உதடுகளுக்கு..

 

 கவிமலர்
மலர்வதற்குள்
விழி மலர்
மூடுவதேன்>>:<<